டிரெண்டிங்

அமெரிக்க அதிருபருக்கு ஆஃபர் கொடுத்த மெக்சிகன் உணவகம்.. ஊழியரை வியக்கச் செய்த பைடன்!

JananiGovindhan

மெக்சிகன் உணவுகளை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக டேக்கோஸ், பரிட்டோஸ் மற்றும் சிக்கன் கெசடில்லாஸ் (quesadilas) போன்ற மெக்சிகன் வகை உணவுகள் எப்போதுமே அனைவரது ஃபேவரைட்டாகவே இருக்கும். அது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பிடித்தமானதாக இருந்திருக்கிறது.

ஏனெனில் கடந்த வியாழனன்று (அக்.,13) லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டேக்கோ 1989 என்ற மெக்சிகன் உணவகத்திற்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு தனக்கு பிடித்த மெக்சிகன் உணவான சிக்கன் கெசடில்லாஸை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை பைடனின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிரப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவில், லாஸ் ஏஞ்சலஸின் மேயரான கரென் பாஸ்-க்காக டேக்கோ 1989-ல் உணவு வாங்க நேரடியாகவே சென்றிருக்கிறார் பைடன். அங்கு வந்த பைடனை வரவேற்ற உணவக ஊழியரிடம் நலம் விசாரித்ததோடு, கரென் பாஸ்-க்கான ஆர்டரை வாங்க வந்திருக்கேன் என்கிறார்.

உடனே அவர் கேட்ட ஆர்டரை எடுத்து வைத்த கேஷியர், “உங்களுடைய பொதுச் சேவைக்காக 50% தள்ளுபடி இருக்கிறது. 16.45 டாலர் (₹1,355.78) உணவின் விலை” என்று கூறியிருக்கிறார். அதற்கு பைடைன் 60 டாலரை கொடுத்து அடுத்து வரும் கஸ்டமருக்கு இலவசமாக உணவு கொடுக்கும்படி கூறியிருக்கிறார். அந்த 60 டாலரில் 20 டாலரை உண்டியலில் போட்டிருக்கிறார் கேஷியர்.

இதைத் தொடர்ந்து `என்ன வாங்கினீர்கள்?' என கேட்டதற்கு `சிக்கன் கெசடில்லா' எனக் கூறி எல்லாருக்கும் நன்றிகள் என பைடன் கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோ 37 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், பைடனின் இந்த எளிமையான உபசரிப்புக்கு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.