டிரெண்டிங்

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா - பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

webteam

செய்தியாளர்களை ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் ஓர் அரசியல் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பதை செய்தியாக்குவது இயல்பான நிகழ்வு என்ற அடிப்படையை புரிந்து கொள்ளாமல் பிரேமலதா ஆத்திரம் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

இது அவரின் பக்குவமற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மீது பாய்வது, தரக்குறைவாக நடத்துவது போன்ற மோசமான போக்குகளை பொதுவாழ்வில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது அரசியல் பண்‌பற்ற செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செ‌யலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகத்துறை நண்பர்களை ‘நீ, வா, போ’ என்று ஒருமையில் பேசுவதும், வீட்டு வாசலில் காத்துக்கிடப்பவர்கள் என்று குறிப்பிடுவதும் அரசியல் பண்பற்ற போக்கு என ‌விமர்சித்துள்ளார்.