சமுதாயத்திற்கு தேவையான வசனங்கள் மெர்சல் திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திரையில் வெளியான பிறகும் மெர்சல் படம் சிக்கல்களை சந்தித்து. படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில காட்சிகளை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மெர்சல் பட சர்ச்சை தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் மெர்சல் திரைப்படத்தை பார்த்த வைகோ, படம் மிகவும் சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய சமுதாயத்தில் சில மருத்துவமனைகளில், ஒரு சில கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடுத்தர, ஏழை மக்களின் மொத்த பொருளாதாரத்தையும் சுரண்டும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் இந்த பிரச்சனைகள் இருக்காது. மக்கள் தொகைக்கேற்ப அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடையாது.
இன்றைய சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை படத்தில் பிரதிபலித்திருக்கிறார்கள். மிகவும் சிறப்பான நடிப்பை நடிகர் விஜய் இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். படம் அற்புதமாக இருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. ஏ.ஆர்.ரகுமான் அற்புதமாக இசையத்துள்ளார். உரையாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார்.