வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி போட்டியிடபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கயுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் பிரச்சார கூட்டங்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “தற்போது நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடைய முடிவை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எங்களது கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. அதனால் எங்களுடைய கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் என் கட்சி வேட்பாளர்களுக்கு நான் பிரச்சாரம் செய்யவுள்ளேன். பின்னர் தேவைப்பட்டால் ஏதாவது ஒரு தொகுதியை காலி செய்து நான் போட்டியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்திருந்தனர். அதில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களும், ராஸ்டிரிய லோக் தளம் 3 இடங்களும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் போவதில்லை என இக்கூட்டணி தெரிவித்திருந்தது.