டிரெண்டிங்

1991 முதல் 2016 வரை - சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டதும் வென்றதும்!

sharpana

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டியபாடில்லை. தங்களுக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் 6 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக தரப்பு முன் வந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 முறை கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்கிறது.

 சட்டமன்ற தேர்தல் வரலாற்றை பொறுத்தவரை 1991ஆம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. 1996இல் 40 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. 2001ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றது. 2006ஆம் ஆண்டு 13 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றி கண்டது. 2011ஆம் ஆண்டு 12 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளிலும் வென்றது. 2016ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெறவில்லை.

இந்த சூழலில் 10 தொகுதிகள் வேண்டும் என திமுக தரப்பிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு வருகிறது. ஆனால் திமுக அதனை ஏற்க மறுக்கிறது. தேர்தல் பரப்புரைக்கு குறைந்த நாட்களே இருப்பதால் விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. எனவே நாளை நடைபெற இருக்கும் மாநிலக்குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுக்கும் என்கின்றனர் நிர்வாகிகள். இதனை அடுத்து திமுக உடனான தொகுதி பங்கீடும் கையெழுத்தாகும் எனச் சொல்லப்படுகிறது.