பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தி பேசிய நடிகர் எஸ்.வி.சேகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் கன்னத்தை தொட்ட விஷயம் பெரும் பரபரப்பானது. ஆளுநரின் இந்தச்செயலுக்கு அரசியல் கட்சிகளும், பத்திரிகையாளர்களும் கண்டித்தனர். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி மிகவும் தரக்குறைவாக பதிவிட்டிருந்தார். எஸ்.வி.சேகரின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
தந்தை பெரியார் உள்ளிட்ட மக்கள் மதிக்கும் தலைவர்கள், பெண்கள், பத்திரிகையாளர்களை இழிவாக பேசுவது, அவமரியாதை செய்வது போன்ற செயல்களை ஹெச். ராஜா, எஸ்.வி. சேகர் போன்ற பாஜக தலைவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருகின்றனர். ஆனால் நியாயம் கேட்டு போராடுபவர்களை மட்டும் காவல்துறையினர் கைது செய்து வருவது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.
எனவே, பெண் பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்தி பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.வி. சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.