டிரெண்டிங்

பிரதமரை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் - ராஜ்நாத் சிங் ஆலோசனை

பிரதமரை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் - ராஜ்நாத் சிங் ஆலோசனை

rajakannan

பிரதமரை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி திட்டம் தீட்டுவதாக வந்த கடிதம் தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. மாவோயிஸ்ட்கள் 5 பேரை மகாராஷ்ட்ர காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு வந்த கடிதம் மூலம் இந்தத் தகவல் வெளியானது. கடிதம் குறித்து மத்திய உளவுத்துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி மீதான கொலை மிரட்டல் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை செயலாளர் மற்றும் உளவுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமரின் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மகாராஷ்டிரா போலீசாரிடம் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கூட்டத்தில், பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.