டிரெண்டிங்

சட்டசபை தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவில் தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசியத்தலைவர்கள்

Veeramani

தேர்தலையொட்டி, தேசிய தலைவர்கள் உட்பட பலரும் தமிழகத்தில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் இத்தனை தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பரப்புரை செய்ததே இல்லை. இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

 தேர்தல் நேரங்களில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்துக்கு பரப்புரைக்காக வருவது புதிதல்ல. ஆனால் கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் தமிழகம் வரும் தேசியத்தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

 பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என பாஜக தலைவர்களின் வருகை தொடர்கிறது. காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தியைத் தொடர்ந்து, அவரது சகோதரி பிரியங்காவும் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். தேசியத்தலைவர்களின் வருகைக்கு பின்னால், தேர்தல் மட்டுமல்ல, கட்சியை பலப்படுத்தும் நோக்கமும் உள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மி.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இல்லாத இந்த தேர்தல் களத்தில், தேசிய கட்சிகள் தங்கள் பலத்தை தமிழகத்தில் பெருக்கிக்கொள்ளவும் பிரசார வருகையை வழியாக்கிக்கொள்கின்றன என்றால் மிகையல்ல.