ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலை கொடுத்து வாங்க முற்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவே மீதமுள்ளது. இதனால் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் பிரதமர் மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் பொதுகூட்டத்தில் பேசும் போது எங்களுடம் 40 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர் எனக் கூறியிருந்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முற்படுகிறது என்று அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டுவருகிறது. அவர்கள் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு கட்சி மாற 10 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கொடுக்க முற்படுகின்றனர். அவர்களிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லாததால் அவர்கள் இதுபோன்ற குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். அதேபோல மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என ஒரு நாட்டின் பிரதமர் கூறுவது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் அசோக் கோயல், “ஆம் ஆத்மி கட்சி தோல்வி பயத்தால் இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியிலுள்ள உட்கட்சி பூசலை சரிசெய்ய இயலாமல் பாஜகவை தேவையில்லாமல் இவ்விவகாரத்தில் கொண்டுவருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.