டிரெண்டிங்

மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்..!

மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்..!

PT

மணிப்பூரில் ஆளும் கட்சியான பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை 9 எம்.எல்.ஏ.க்கள் விலக்கிக் கொண்டதால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிருந்தாலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பாஜக தனது ஆட்சியை மணிப்பூரில் அமல்படுத்தியது. பாஜக முதலமைச்சராக பைரன் சிங் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் நேற்று திடீர் திருப்பமாக பாஜக கட்சியின் மிக முக்கிய ஆதரவு கட்சியான தேசிய மக்கள் கட்சி, டி.எம்.சி கட்சி மற்றும் சுயேட்சையாக ஜிரிபாம் தொகுதியில் நின்று வென்ற எம்.எல்.ஏ ஆகியோர் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றனர். இதனை தவிர பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். விரைவில் இவர்கள் காங்கிரஸில் இணையப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள், தங்களது ராஜினாமா தங்களது தனிப்பட்ட முடிவில் எடுக்கப்பட்டது எனக் கூறினர். மேலும் இதற்கான காரணத்தை கேட்ட து அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். 9 எம்எல்ஏக்களின் ஆதரவு விலகலால் பாஜக அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, மணிப்பூரில் உள்ள ஒரே மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஆளும் பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், மணிப்பூர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.