டிரெண்டிங்

பிரதமரை விமர்சித்த மணிசங்கர் ஐயர் சஸ்பெண்ட்

பிரதமரை விமர்சித்த மணிசங்கர் ஐயர் சஸ்பெண்ட்

rajakannan

பிரதமரை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து மணிசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை ’நீச் ஆத்மி’ என்று மணிசங்கர் ஐயர் விமர்சித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீச் ஆத்மி என்ற சொல் வர்ணாசிரம அடிப்படையில் தீண்டதகாதவன், பிறப்பால் தாழ்ந்தவர் என்பதை குறிக்கும். இதனால் அவரது கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது.

பாஜகவினர் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மணிசங்கர் விமர்சனத்தை கடுமையாக கண்டித்தனர். ரவிசங்கர் பிரசாத், அமித்ஷா, அருண் ஜெட்லி என வரிசையாக மணிசங்கர் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். மணிசங்கரின் இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சியின் நிலப்பிரபுத்துவ சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று பிரதமர் மோடியும் விமர்சித்தார். 

இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி தற்காலிக நீக்கம் செய்துள்ளது. மேலும் தன்னுடைய கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் நாளை மறுநாள் முதல் கட்ட  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், மணிசங்கர் விவகாரத்தில் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சியின் தந்திர நடவடிக்கை என பாஜக விமர்சித்துள்ளது.

ராகுல்காந்தியின் இந்த நடவடிக்கையை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். ராகுலின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்புவர்களுக்கு இது ஒரு உதாரணம் என்று அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.