டிரெண்டிங்

மோடியை மோசமான வார்த்தையால் விமர்சித்த மணிசங்கர்

மோடியை மோசமான வார்த்தையால் விமர்சித்த மணிசங்கர்

rajakannan

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் ஐயர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கர் இறந்தவுடன் அவரது கருத்துக்களை ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிதைத்துவிட்டனர். அவரது பங்களிப்பை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஆனால் மக்கள் மனதில் இருந்து அம்பேத்கரின் நினைவுகளை அழிக்க முடியவில்லை என்று கூறினார். மறைமுகமாக காங்கிரஸ் கட்சி அம்பேத்கரின் புகழை இருட்டடிப்பு செய்ததாக மோடி விமர்சித்தார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை விமர்சிக்கும் வகையில் அவரை ‘நீச் ஆத்மி’(neech aadmi) என்ற வார்த்தையில் மணி சங்கர் கூறினார். மணி சங்கரின் இந்த விமர்சனம் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது நீச் என்றால் தீண்டதகாதவன் என்று பொருள். இந்த வார்த்தை நேரடியாக ஜாதியுடன் தொடர்பு உள்ளது. 

இதனையடுத்து, குஜராத் தேர்தல் பரப்புரையின் போது பேசிய பிரதமர் மோடி, மணி சங்கரின் கருத்து அவரது நிலப்பிரபுத்துவ சிந்தனையை வெளிப்படுத்துகிறது. முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த போது அப்படி என்ன நான் தீண்டதகாத செயலை செய்து விட்டேன்? என்று கடுமையாக விமர்சித்தார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பாஜகவினர் மட்டுமல்லாது பல தரப்பினரும் மணி சங்கரின் கருத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மணி சங்கர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாதகவே லாலு பிரசாத் கூறினார். 

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று ராகுல் காந்தியே, மணிசங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “பாஜக மற்றும் பிரதமர் மோடி மோசமான வார்த்தைகளை கொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறது. ஆனால் கட்சிக்கு வேறுவிதமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டது. மணிசங்கர் கூறியை வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியும் நானும் மணிசங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார். 

இதனையடுத்து தன்னுடைய கருத்து தொடர்பாக மணிசங்கர் விளக்கம் அளித்தார். மணிசங்கர் கூறுகையில், “கீழ்தரமான அரசியல் என்று விமர்சிக்கதான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த வார்த்தை ஜாதியுடன் தொடர்புபடுத்தி நான் கூறவில்லை. ஹிந்தி எனக்கு தாய்மொழி அல்ல. அப்படி எனது வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.