டிரெண்டிங்

”இந்த கல்லும்.. E-waste-ம்...” - மங்களூரு இளைஞருக்கு ஃப்ளிப்கார்ட் கொடுத்த தீபாவளி பரிசு!

JananiGovindhan

ஆன்லைனில் பண்டிகைகால சலுகைகளைக் கண்டு ஆர்டர் செய்வோர் பெரும்பாலும் ஏமாற்றம் அடைவது தொடர் கதையாகி வருகிறது. ஐஃபோன் ஆர்டர் செய்தால் துணி சோப்பு அனுப்புவது போன்ற பல சம்பவங்கள் அண்மைக்காலமாக சமூக வலைதளங்கள் வாயிலாக அம்பலமாகி வருகிறது.

அந்த வகையில், மங்களூருவைச் சேர்ந்த சின்மயா ரமணா என்பவர் ஃப்ளிப்கார்ட்டின் தீபாவளி சலுகையில் லேப்டாப் ஆர்டர் செய்திருக்கிறார். அதன் டெலிவரிக்காக ஆவலோடு காத்திருந்தவர் லேப்டாப் பார்சலை பிரித்து பார்த்ததும் பெருத்த அதிருப்திக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.

அதில், லேப்டாப்புக்கு பதிலாக சில தேவையற்ற சில எலக்ட்ரானிக் பொருட்களும், ஒரு பெரிய கல்லும் மட்டுமே இருந்திருக்கிறது. இதனைக் கண்டதும் கடுமையான கோபத்துக்குள்ளான அந்த நபர் உடனடியாக ஃப்ளிப்கார்ட் நிர்வாகத்தை தொடர்புகொண்டு தனக்கு டெலிவரி ஆன பார்சலின் unboxing வீடியோ மற்றும் ஃபோட்டோக்களோடு புகார் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஃப்ளிப்கார்ட் தரப்பிலிருந்து முறையான பதில் வராததால் அதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “எப்போதும் ஃப்ளிப்கார்டை தேர்வு செய்வதற்காக இன்று வருந்துகிறேன். யாரெல்லாம் இதேபோல உணருகிறீர்களோ தயவுசெய்து ஃப்ளிப்கார்டில் எதையும் ஆர்டர் செய்யாதீர்கள்.

எதாவது தவறு நேர்ந்தால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இருக்காது. என்னைப் போலவே உதவியே இல்லாமல் இருப்பீர்கள்” என பெரும் அதிருப்தியோடு பதிவிட்டுள்ளார். இதுபோக Open Box Delivery என்ற ஆப்ஷனையும் ஃப்ளிப்கார்ட் தரப்பிலிருந்து முன்னெடுக்கவில்லை என்றும் சாடியிருக்கிறார்.

இதனையடுத்து அடுத்த நாளே சின்மய ரமணாவின் ட்விட்டர் பதிவு வைரலாகவே ஃப்ளிப்கார்ட் தரப்பில் இருந்து refund கொடுப்பதாகவும் இனி ஃப்ளிப்கார்டிலேயே தான் ஷாப்பிங் செய்யவிருப்பதாகவும் சின்மயா ரமணா பதிவிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த அக்டோபர் 23ம் தேதி புகார் தெரிவித்திருந்த சின்மயா ரமணாவின் பதிவில் பல ஆன்லைன் பயனர்கள் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களால் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.