டிரெண்டிங்

ராஜபக்சே பிரதமரானது சட்டவிரோதமானது - இலங்கை அமைச்சர்

webteam

இலங்கையின் பிரதமராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றது சட்டவிரோதமானது என்று இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அதிபர் சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது. 

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர். 

இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் பிரதமராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றது சட்டவிரோதமானது என்று இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா கூறியுள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மங்கள சமரவீரா, இது ஜனநாயகத்திற்கு எதிரான சதி என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதனிடையே, தமது நண்பர் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.