டிரெண்டிங்

கேரளா டூ லண்டன்... சைக்கிளிலேயே 30,000 கி.மீ-ஐ கடக்க துணிந்த கேரள IT Dood!

JananiGovindhan

தனியாக பயணங்கள் மேற்கொள்வது ஒரு அலாதியான இன்பமாகத்தான் இருக்கும். எவரது தொந்தரவும் இல்லாமல் எவருக்காகவும் காத்திருக்காமல் தனியாக சென்று வரும் பயணங்கள் சில புரிதல்கள், உணர்வுகள், ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை கொடுக்க தவறாது. வாழ்க்கையின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து யோசிக்க பயணங்கள் பெரிய ஊக்கமாக இருக்கும்.

அந்தப் பயணம் கடல் கடந்து, கண்டம் கடந்து சென்றால் எப்படி இருக்கும் என என்றாவது எண்ணிப்பார்த்ததுண்டா? அப்படிப்பட்ட பயணம் குறித்துதான் தற்போது பார்க்கப்போகிறோம். ஆனால் முழுக்க முழுக்க சமூகம் சார்ந்த பயணமாக இருக்கிறது என்பது கூடுதல் தகவலாக அமைந்திருக்கிறது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டதைச் சேர்ந்த ஃபைஸ் அஷ்ரஃப் அலி என்ற 34 வயதான நபர் 450 நாளில் 30 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை சைக்கிளிலேயே கடந்து சாகச பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு அதனை தொடங்கவும் செய்திருக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்த சாகச சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறார் ஃபைஸ். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய ஃபைஸின் சைக்கிள் பயணத்தை மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு செல்ல விசா அனுமதி கிடைக்காததால் முதலில் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு சைக்கிளில் சென்று அங்கிருந்து விமானம் வழியாக ஓமன் நாட்டிற்கு செல்ல இருக்கிறார் ஃபைஸ். அதன் பிறகு மத்திய கிழக்கு நாடுகளான அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஈரான், ஈராக், துருக்கி, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு சைக்கிளிலேயே பயணிக்க இருக்கிறார்.

அதேபோல, ஐரோப்பிய நாடுகளான ரோமானியா, ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வழியாக சைக்கிளில் பயணித்து இங்கிலாந்தை அடைவதே ஃபைஸின் இந்த பயணத்தின் இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைஸ் அஷ்ரஃபின் இந்த பயணத்திற்கு அமீரக நாட்டைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நிதி உதவி செய்கிறது. மேலும் சர்வதேச ரோட்டரி கிளப்பும் இந்த பயணத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளது.

சோலோ பயணத்தை மேற்கொள்வதற்ஙாக விப்ரா நிறுவன ஊழியராக இருந்த ஃபைஸ், தனது ஐ.டி. வேலையை துறந்திருக்கிறார். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு கோழிக்கோட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிளிலேயே பயணம் செய்திருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.