டிரெண்டிங்

”24 வருஷமா ஒரே தட்டில்தான் சாப்பாடு” - அம்மாவின் பாசமும் அதன் பின்னணியும்.. உருகிய மகன்!

JananiGovindhan

பெற்றோர்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் குறித்து பிள்ளைகள் ஏன்? எதற்கு? என கேள்வி கேட்டாலும் சொல்லமாட்டார்கள். ஆனால் அதற்கு பின்னணியில் உணர்வு ரீதியான ஏதேனும் சில காரணங்களை கட்டாயம் கொண்டிருப்பார்கள்.

அப்படியான நிகழ்வு குறித்த ட்விட்டர் பதிவுதான் தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விக்ரம் புத்தனேசன் என்பவர், மறைந்த தன்னுடைய தாயார் இரண்டு தசாப்தங்களாக ஒரே தட்டில் உணவு சாப்பிட்டு வந்ததன் பின்னணி குறித்து உணர்ச்சி ததும்ப ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், “இது என்னுடைய அம்மாவின் தட்டு. இந்த தட்டில்தான் கடந்த 20 ஆண்டுகளாக என் அம்மா சாப்பிட்டு வருகிறார். அதில் என்னையும் என் அக்கா மகளை தவிர மற்ற எவரையும் சாப்பிட என் அம்மா அனுமதிக்க மாட்டார். அவருடைய மறைவுக்கு பிறகுதான், ஏன் அதே தட்டில் இத்தனை ஆண்டுகளாக என் அம்மா சாப்பிட்டு வந்தார் என்ற உண்மை தெரியவந்தது.

ஏனெனில் அந்த தட்டு எனக்கு பரிசாக வந்தது. 1999ம் ஆண்டு 7வது படித்தபோது எனக்கு கிடைத்த பரிசுதான் அந்த தட்டு. அதன் நினைவாகத்தான் அந்த தட்டிலேயே கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்திருக்கிறார் என் அம்மா. இதுபற்றி என்னிடம் கூட இதுவரை அவர் கூறியதில்லை” என விக்ரம் புத்தனேசன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பதிவைக் கண்ட ஏராளமானோர், அவரது அம்மாவின் பாசத்தை எண்ணி நெகிழ்ந்துபோய் பதிவிட்டிருக்கிறார்கள். மேலும், “இதுதான் நிபந்தனையற்ற அன்பு” , “இதனால்தான் அம்மாக்களின் அன்பை வேறெவருடனும் ஒப்பிட முடியாது” என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.