உத்திரபிரதேச இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பர் மக்களவை தொகுதிகளுக்கும், பீகாரில் அராரியா மக்களவை மற்றும் ஜகனாபாத், பஹாபூவா ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோரின் கோரக்பூர் மற்றும் புல்பர் தொகுதிகளிலேயே பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு மாயாவதி மறைமுகமாக ஆதரவு தெரிவித்து இருந்தார். அதாவது, “கோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம்” என்று கூறியிருந்தார். இதனால், பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி களத்தில் நின்றது.
இந்நிலையில், உத்திர பிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் உள்ளதற்கு, மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மம்தா, முடிவின் ஆரம்பம் தொடங்கிவிட்டது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதேபோல், பீகார் மாநிலத்திலும் லாலு பிரசாத்தின் ராஷ்டிர ஜனதா கட்சி வேட்பாளர்கள் அராரியா மற்றும் ஜெஹன்னாபாத் தொகுதிகளில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய வெற்றி என்ற கருத்தையும் அவர் கூறியுள்ளார்.