மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவத்துக்காக மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு அவரை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வைகோ ஆபத்தானவர் என்றால் மலேசிய அரசு அவருக்கு எப்படி விசா அளித்தது?. விசா அளிக்கப்பட்டாலே நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சமம். விசா அளித்த பிறகு வைகோவை அவமானப்படுத்தும் வகையில் மலேசிய அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நடந்த சம்பவத்திற்கு வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு அவரை மலேசிய நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமணத்துக்காக அந்நாட்டுக்கு சென்ற வைகோவை, ஆபத்தானவர் என்று கூறி விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் இந்தியாவுக்கு மீண்டும் திரும்ப அனுப்பவும் மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.