தமிழகத்துடன் சேர்த்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரியில் பிரதான கட்சிகளில் ஒன்றான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் அதிமுகவுடனான கூட்டணியில் உள்ளது.
இருப்பினும் சட்டப்பேரவை தேர்தலிலும் இது தொடருமா என்பது இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்துள்ளனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ள திமுகவும் என்.ஆர். காங்கிரஸுடன் இணைவது குறித்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது.