திருச்சியில் போலீஸ் உதைத்து உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், தனக்கு அகிம்சையை கற்றுக்கொடுத்தது தனது தாய் என்று கூறினார். தானும் புடவைக் கட்டியவன், அதனால் பெண்கள் குறித்து தெரியும் என்றார். தற்போதுள்ள அதிமுக அரசை விமர்சித்த அவர், அண்ணாயிசத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்போதைய ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். திருச்சியில் நடைபெற்ற உஷா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பேசிய கமல், குற்றம் செய்த காவலர் தண்டிக்கப்பட வேண்டும், அதேசமயத்தில் பிரச்னையை பேசித் தீர்த்த காவல் அதிகாரிக்கு சல்யூட் என்று கூறினார்.
அத்துடன் உயிரிழந்த உஷா குடும்பத்தினருக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்தார். ரூ.2 லட்சம் வழங்குவதாய் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிதியுதவியை யாரிடம் கலந்து ஆலோசிக்கமால் ரூ.10 லட்சமாக தானே உயர்த்தியதாகவும், அதற்கு கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கமல் கேட்டுக்கொண்டார்.