அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் நீண்ட நாட்கள் பறக்காது என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவுக்கு என அதிகாரப்பூர்வ நாளேடாக ''நமது அம்மா'' என்ற நாளிதழையும் அவர்கள் வெளியிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் ஆசியுடன் நடைபெறும் அதிமுக ஆட்சியைக் கலைக்க நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் நீண்ட நாட்கள் பறக்காது என்றும், அரசியல் அவதாரம் எடுத்தவர்களின் வசனம் விரைவில் புஸ்வாணமாகும். அரசியலில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறுதை பார்க்கத்தான் போகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், துணை முதல்வரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.