முதல்வர் அணியினர் ஓபிஎஸ் தரப்பினரை ஓதுக்குவதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவரும், அதிமுக எம்.பி.யுமான மைத்ரேயன், “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என்று தனது பேஸ்புக்கில் நேற்று பதிவிட்டிருந்தார். மைத்ரேயனின் இந்த கருத்து ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே இன்னும் பிளவு உள்ளதை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் மைத்ரேயன் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்தனர். இரு அணிகளும் இணைந்தே செயல்படுவதாக பொன்னையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூறினர். மேலும், இது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை தெரிவித்தார்.
இதனையடுத்து, தம்பிதுரை கருத்துக்கு பதிலளிக்கு வகையில், “நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்” என்று பேஸ்புக்கில் மைத்ரேயன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அணியினர் ஓபிஎஸ் தரப்பினரை ஓதுக்குவதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மைத்ரேயன் தனது பேஸ்புக் பதிவில், “கட்சியின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்களை ஓபிஎஸ் அணி என்று ஒதுக்காமல் அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.