தமிழக போக்குவரத்து காவல்துறையினர் அளிக்கும் அபராத சீட்டில் தமிழ் இல்லை என்பதை நிச்சயம் சரி செய்யப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மாஃபா அறக்கட்டளை சார்பில் இளைஞர் மேம்பாடு மற்றும் மருத்துவம், சுற்றுச்சூழல், மகளிர் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிகள் முடித்த 600 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் 20 விதவைப் பெண்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர். இதையடுத்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “திமுக சங்கர மடம் இல்லை என்று கூறினார்கள். இப்போது மூன்றாவது தலைமுறை வாரிசுகள் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். ஆகவே திமுக இன்னும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என நான் நினைக்கிறேன்.
நாங்குநேரி, விக்ரவாண்டி தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தியதே விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தோல்வி சந்தித்ததற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.
போக்குவரத்து போலீசார் வழங்கும் அபராத சீட்டில் தமிழ் இல்லை என்பதை மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் நிச்சயம் செய்யப்படும். கண்டிப்பாக மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். தமிழும் அதற்கு இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.