டிரெண்டிங்

மதுரையில் அமலானது முழு முடக்கம்! எவையெல்லாம் இயங்கலாம்?

webteam

கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக மதுரையில் முழு முடக்கம் அமலானது

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் இன்று முதல் மதுரையில் அமலானது.

மதுரை மாநகர் எல்லை பகுதிகளில் 6 சோதனை சாவடிகள், மதுரை மாவட்ட எல்லைகளில் 8 சோதனை சாவடிகள் என மொத்தம் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மதுரை மாநகர் பகுதியில் 20 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. அத்தியாவசியமின்றி வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், வழக்குப்பதிவு போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் உள்ள சுமார் 4 லட்சம் வீடுகளில் காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள 1400 களப்பணியாளர்களுடன் குழு அமைக்கப்பட்டுள்ளது

  • பால் பூத், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்
  • காய்கறிக்கடை , மளிகைக் கடை, பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை செயல்பட அனுமதி
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி
  • ரயில் மற்றும் விமான பயணிகள் இ பாஸ் பெற்று வாகனங்களில் செல்லலாம்