டிரெண்டிங்

“வாக்குகளுக்கு பணம் கொடுப்பது தேசவிரோதம்”- மதுரையில் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கை பலகை!

kaleelrahman

மதுரையில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

இதனை அடுத்து மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள சாந்தி சதன் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், குடியிருப்பு வளாகத்தின் முகப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்யும் அரசியல் கட்சியினர் குறித்து தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து பலகை வைத்துள்ளனர்.

இது குறித்து குடியிருப்புவளாக செயலாளர் பாலகுருவிடம் கேட்டபோது, “சுயமாக சிந்தித்து வாக்களிக்க முயற்சிக்கும் வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணத்தை வழங்கி வாக்குகளை கவர முயற்சி செய்கின்றனர். அப்படி பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதால் நேர்மையான அரசு அமைவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது. இதனால் எங்களது குடியிருப்பு வளாகத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் சமரசமின்றி சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அனைவரது ஒப்புதலை பெற்ற பின்னரே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது” என தெரிவித்தார்.