டிரெண்டிங்

ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது? - தீர்ப்பில் விளக்கம்

ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது ஏன் செல்லாது? - தீர்ப்பில் விளக்கம்

webteam

ஏ.கே.போஸ் வேட்பு மனு ஏற்கப்பட்டதே செல்லாது என உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.

ஆனால், சுயநினைவுடன் இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சரவணன் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில்,  ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்துள்ளார்.

அதாவது, “ அப்போலோ மருத்துவமனை இடமிருந்து எவ்வித ஆவணங்களையோ, மருத்துவ அறிக்கைகளையோ ஆராயாமல், செய்திகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொண்டு ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யப்பட்ட வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்.

 கையெழுத்துக்கு பதிலாக கைரேகையை அனுமதிக்கக்கோரி அவைத்தலைவர் மதுசூதனன் கடிதத்தை கூட மருத்துவ சான்றிதழுடன் இணைக்கவில்லை. இவ்வாறு இணைக்கவில்லை என்பதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணைய மூத்த முதன்மை செயலாளரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக படிவம் ஏ, பி ஆகியவற்றை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வேட்பு மனு ஏற்கப்பட்டதே செல்லாது.

 வேட்புமனு முறையற்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது முடிவான பிறகு, போஸ் வெற்றி பெற்றது செல்லுமா செல்லாதா என ஆராய வேண்டியதில்லை. எனவே போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது. சரவணன் தொடர்ந்த தேர்தல் வழக்கு ஏற்கப்படுகிறது.

 வேட்பு மனு ஏற்கப்பட்டது தவறு என்ற அடிப்படையில் தான் சரவணன் வழக்கு தொடர்ந்துள்ளார். சுரண்டல் குற்றச்சாட்டு அடிப்படையில் வெற்றியை எதிர்த்த வழக்கு இது இல்லை. எனவே இரண்டாம் இடத்தில் வந்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. அப்படி அறிவிக்க கோரிய கூடுதல் மனு நிராகரிக்கப்படுகிறது” என நீதிபதி தெரிவித்தார்.