டிரெண்டிங்

விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேனர்கள்: உயர்நீதிமன்றம்

விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேனர்கள்: உயர்நீதிமன்றம்

rajakannan

திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்காக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்விழாவுக்காக, அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் வைக்கப்பட்ட பேனர்களின் எண்ணிக்கை குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், விதிமுறைகளுக்கு உட்பட்டு 220 பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிக அளவில் பேனர் வைக்கப்பட்டதில் இருந்தே விதிமீறல் நடைபெற்றிருப்பது தெரியவருவதாக கூறினர். அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் விழா முடிவடைந்தவுடன் அகற்றப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பான அறிக்கையை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.