டிரெண்டிங்

“மு.க.அழகிரி திமுக தலைவராக பதவி ஏற்பார்” - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

“மு.க.அழகிரி திமுக தலைவராக பதவி ஏற்பார்” - அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

webteam

இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அக்கட்சியின் தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் மு.க.அழகிரி பதவி ஏற்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அம்மா அரசைப் பொருத்தமட்டில் விருப்பு வெறுப்பு பார்ப்பதில்லை. திமுகவிற்கு இது கை வந்த கலை. மறைந்த தலைவர் கலைஞருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. அரசு சார்பில் நானே கலந்து கொண்டேன். என் காரின் மீது திமுகவினர் கல் வீசினார்கள். மெரினாவில் இடம் என்பது பல கோடி ரூபாய் மதிப்பிலானது. நீதிமன்றத்தில் வழக்கு  இருந்ததால் எங்களால் இட ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை இருந்தது. இவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுதான் இடம் வாங்கினார்கள்.

தற்போது விளாச்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். அதே பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது "சென்று வா மகனே சென்று வா"என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் என்பது கோவலன் கதை. அதில் கோவலன் சென்று திரும்பி வரவே இல்லை. அதே போல் திமுகவும் போனது போனதுதான் ஸ்டாலின் திரும்ப வரவே முடியாது என்பதற்காகவே இந்தப் பாடலை சாட்சி” எனப் பாடலை பாடி காட்டினார்.

மேலும் பேசிய அவர், “திமுகவில் தற்போது நடைபெற்று வரும் சில செயல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கனிமொழி, துரைமுருகன் வீட்டில் சோதனை என்பது தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்லிதான் சோதனை நடைபெற்றது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். கனிமொழியை இந்த நிலைக்கு தள்ளியது மு.க.ஸ்டாலின் என்றுதான் சிலர் தெரிவிக்கின்றனர். தற்போது நடைபெறும் இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் பட்சத்தில், திமுக கட்சி கை மாறும் நிலை வரும். அந்த நேரத்தில் மதுரை மண்ணின் மைந்தராக இருக்கக்கூடிய மு.க அழகிரிதான் தலைவராக பதவி ஏற்பார்” என்று தெரிவித்துள்ளார்.