பீகார் மாநிலத்தில் 11 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சார அமைப்பின் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தொகுதி பங்கீடுகள் முடிவாகி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 11 தொகுதியில் போட்டியிட போவதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பிரச்சார அமைப்பின் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஸ்டிரிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி ஏறக்குறையை உறுதியாகிவிட்டது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக பீகாரில் காங்கிரஸ் கட்சி 14 இடங்கள் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் காங்கிரஸ் மற்றும் ராஸ்டிரிய ஜனதா தள கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியதாக கூறப்பட்டது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி தற்போது 11 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. இதனால் ராஸ்டிரிய ஜனதா தளம் 17 அல்லது 18 இடங்களில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதர இடங்களில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்பது குறிப்பிடத் தக்கது.