மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது எதிரேவந்த லாரி மோதிய விபத்தில் அண்ணன் தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த அபிநயா, ஆனந்தராஜ். அண்ணன் தங்கையாகிய இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை ஆனந்தராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.
மன்னார்குடி அடுத்துள்ள வடபாதி சொக்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது முத்துப்பேட்டையில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராத வகையில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்தராஜ், அவரது சகோதரி அபிநயா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அண்ணன் தங்கை இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.