டிரெண்டிங்

தேர்தலுக்கு தேர்தல் பிரபலமாகும் நோட்டா - முதலில் பயன்படுத்தப்பட்டது எப்போது?

தேர்தலுக்கு தேர்தல் பிரபலமாகும் நோட்டா - முதலில் பயன்படுத்தப்பட்டது எப்போது?

rajakannan

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு ‌வழங்குவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தானுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரை சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. விரைவில் இதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. ஒரு சிலர் நோட்டாவுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர். அண்மையில் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது, வாக்காளர்கள் மத்தியில் நோட்டா மிகவும் பிரபலமடைந்தது. தற்போது நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலிலும், நோட்டாவை தேர்வு செய்ய சிலர் எத்தனிக்கலாம். அவர்கள் இந்த ஐந்து விஷயங்களை மனதிற் கொண்டு நோட்டாவுக்கு வாக்கை செலுத்தலாமா? கூடாதா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு நோட்டா என்றால் என்னவென்பதை முதலில் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு ‌வழங்குவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தானுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நோட்டாவுக்கு எப்படி வாக்களிப்பது என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவில் வேட்பாளர்கள் வரிசைக்கு கீழே கடைசியாக இந்த நோட்டா பொத்தான் இருக்கும். அந்தப் பொத்தானை அழுத்தி, நோட்டாவுக்கு வாக்களிக்க விரும்புபவர்கள், தங்களது வாக்கை பதிவு செய்யலாம்.

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு தான் நோட்டா பயன்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது தான் நோட்டா பயன்படுத்தப்பட்டது.

நோட்டா தேர்தலில் விளைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளிப்பது சற்று கடினம் தான். தேர்தலின் போது அதிக அளவில் நோட்டாவுக்கு வாக்கு விழுந்தாலும், இறுதி முடிவில், எந்தப் பாதிப்பையும் அது ஏற்படுத்தாது. பின் எதற்காக நோட்டா? என்ற கேள்வி எழும். அதற்கான பதில் வாக்காளர்களை திருப்திபடுத்ததான். அதாவது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க பிடிக்கவில்லை என்பவர்களுக்காகவே இந்த நோட்டா. இதன் மூலம் தங்களது தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான உணர்வை வாக்காளர்களால் வெளிப்படுத்த முடியும்.