தமிழகத்தில் உள்ள 39 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
வரும் 18 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை கண்காணிக்க தலைமைச்செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து 30 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலையில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக 4 ஆயிரத்து 466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் அதிமுக மீது ஆயிரத்து 119 வழக்குகளும், திமுக மீது ஆயிரத்து 410 வழக்குகளும், பிற கட்சிகள் மீது ஆயிரத்து 134 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று கடைசி கட்ட பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பிரசாரம் செய்கின்றனர்.