திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தங்கள் உத்தரவை நிறைவேற்றாத திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவை, சஸ்பெண்ட் செய்தனர். கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபனை நியமித்தனர். அவர்களை மலைத்தூணில் இன்று தீபம் ஏற்ற ஆணையிட்டனர். திருப்பரங்குன்றம் கோயிலையும் மலையையும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் உத்தரவிட்டனர். தர்காவிலிருந்து 50 மீட்டருக்கு வெளியே, பக்தர்கள் தீபம் ஏற்றவும் அனுமதியளித்தனர். அதேவேளையில், தர்காவுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று அதிகாலை நடை திறப்பதற்கு முன்பாகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் மற்றும் முருகன் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், ஆறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில், கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐயப்ப மற்றும் முருக பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையிலேயே பொது தரிசனத்திற்காக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தொடர்ந்து, சரியாக காலை 5:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதும், பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இன்று மாலை மலை மேலே உள்ள கல்தூணில் சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்களின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.