மூன்றாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 227 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. மூன்று கட்ட கலந்தாய்வின் மூலம் இவற்றில் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி இடங்கள், துணைக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவையை செப்டம்பர் 1 முதல் நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. போயிங் 787 ரக விமானங்களை மேம்படுத்துவதால் ஏற்படும் விமானப் பற்றாக்குறை மற்றும் பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் விமானங்களின் பயண நேரம் அதிகரிப்பது ஆகியவையே இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகிறது. எனவே, செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு உள்ள விமான சேவைக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் விருப்பப்படி மாற்று ஏற்பாடுகளையோ அல்லது முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்போ வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது,
அமெரிக்கா தனது நேர்காணல் விலக்குத் திட்டமான 'டிராப்பாக்ஸ்' (Dropbox) வசதியை வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நிறுத்தவுள்ளது. இதனால், வேலை மற்றும் மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலானோர் இனி அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் சந்தித்து நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்த புதிய நடைமுறை இந்தியா போன்ற அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் உள்ள நாடுகளில், விசா வழங்குவதில் பெரும் காலதாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அசாமில் அரிய வகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களை வேட்டையாட முயன்ற 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். இதில் சர்வதேச கும்பல்கள் தொடர்பு இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களை வேட்டையாடுபவர்களை பிடிக்க ஆபரேஷன் ஃபால்கன் என்ற பெயரில் காவல் துறை மற்றும் வனத்துறையை கொண்டு சிறப்பு நடவடிக்கையை அசாம் அரசு மேற்கொண்டுள்ளது. மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படும் காண்டாமிருகத்தின் கொம்பு சர்வதேச சந்தையில் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை விலை போகிறது
நாடாளுமன்ற வளாகத்தில் 124 நாட் அவுட் என்ற வாசகம் கொண்ட சட்டையை அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வித்தியாசமாக போராட்டம் நடத்தினர். மாநில வாக்காளர் பட்டியலில் மின்டா தேவி என்ற 124 வயதுடைய பெண்ணின் பெயர் இருந்ததை குறிக்கும் வகையில் இந்த எண் கொண்ட சட்டையை அவர்கள் அணிந்திருந்தனர். இந்நிகழ்வில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, டிஆர் பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் 15ஆவது நாளாக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மொத்தம் ஒன்பது லட்சம் நாய்கள் உள்ளதாக மாநில கால்நடை துறை தெரிவித்துள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநில அளவில் 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
விரிவான செய்திகளுக்கு: ’ரேபிஸ் மரணங்களில் முதலிடம்’ | தமிழ்நாட்டில் மொத்தம் 9 லட்சம் நாய்கள் - மாநில கால்நடை துறை அறிவிப்பு
சென்னையில் தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 80 ரூபாய் விலை குறைந்து 9 ஆயிரத்து 295 ரூபாய்க்கும், ஒரு சவரன் 640 ரூபாய் விலை இறங்கி 74 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து 126 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து சிறுமி கீழே குதித்த நிலையில், படுகாயங்களுடன் உயிர் தப்பினார். சிறுமியின் பெற்றோர் பிரிந்த நிலையில், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தந்தை தரப்பில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் தாயார் மறுமணம் செய்து கொண்டதால், சிறுமியை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த சிறுமி, இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.