இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த விருது வழங்கும் விழா நேற்று மாலை பெரியார் திடலில் நிகழ்ந்தது.
அதில் விருதைப் பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ், "90 காலகட்டங்களில் தென் தமிழ்நாடு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த சமயம். அந்த காலகட்டத்தில் வளர்ந்த பையன்தான் நான். என் சித்தப்பா கம்யூனிஸ்ட் என்பதால் அவர் மூலம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற தலைவர்களை தெரிந்துகொண்டேன். ஊரில் பல சண்டைகள் நடந்துகொண்டிருந்த சமயம். எனக்கு எல்லாப் பக்கமும் தெரிந்த ஓர் உருவம் டாக்டர் அம்பேத்கரின் உருவம். அவர் இயல்பாகவே வாழ்வோடு இணைந்த ஓர் ஆற்றலாக மாறினார். பெரியார் எனக்குத் தூரத்துக் குரலாகத்தான் இருந்தார். எனக்கு அவரோடு நெருக்கமே ஏற்படவில்லை.
இந்த விருதை வாங்குவது மிக உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதன் காரணம் என் மனைவி. அது ஏன் என்றால், பெரியாரை எனக்குள் கொண்டுவந்து சேர்த்தது அவர்தான். அவர் ஒரு பெரியாரிஸ்ட். நான் ஒரு அம்பேத்கரிஸ்ட். ராம் சாரின் ’காட்சி’ என்ற வலைதளத்தில் என்னுடைய வாழ்க்கையை எழுத ஆரம்பித்தேன். அதைப் படித்துவிட்டு என்னிடம் கருப்புச் சட்டையை போட்டுக் கொண்டு ஒரு தோழியாக பேச வந்தார் என் மனைவி. அப்போது தமிழ்மதி என்ற பெயரில் பெரியார் மேடைகளில் அவர் பேசிக் கொண்டிருந்தார். சென்னை வந்து ஓர் ஆசுவாசமாக சூழலில் பெரியாரைப் பற்றி கற்க ஆரம்பித்தேன். நான் முதன்முதலில் கேட்ட பெரியார் பற்றிய பேச்சே அவர் பேசியதுதான். கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பெரியாரை வித்தைத்தவர், என் காதலி என் தோழி திவ்யா. அதன் பிறகுதான் நான் பெரியாரை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் துவங்கினேன்.
எனக்கு இந்தப் பெண்ணை கொடுத்ததைப் பற்றி பலரும் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் என்னால் அந்த வீட்டுக்குள் தங்குத் தடையின்றி போக முடிந்தது. ஏனென்றால் அந்த வீட்டுக்குள் பெரியார் இருந்தார். நாங்கள் காதலித்த காலகட்டத்தில் வட மாவட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. சாதி மறுப்பு திருமணங்கள், நாடக திருமணங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதை நிறுத்துவதற்காக எல்லாக் குடிசைகளும் கொளுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு பெரியாரின் படத்தைப் பார்த்ததும், அப்பாடா தப்பித்து விடுவோம்போல என்று தோன்றியது. அன்றிலிருந்து அந்த வீடு என் வீடானது. வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் அவருடைய அம்மாவே பார்த்துக் கொண்டார். அதன் பிறகு தீவிரமாக பெரியாரை வாசிக்க ஆரம்பித்தேன்.
பெரியாரைப் புரிந்து கொள்வது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் எப்போதும் நம்மை மேம்படுத்துவதற்கான விஷயங்களையே சொல்லி இருக்கிறார். இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாக பேசி கற்றுக்கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். அதற்கு நீங்கள் கைதட்ட ஆரம்பிப்பீர்கள். உடனே எனக்கு நாடி நரம்பெல்லாம் புடைக்க ஆரம்பிக்கும். இன்னொன்று அவர்களைப் பற்றி பேசும்போது மட்டும்தான் நீங்கள் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீறுவது என்ற ஒன்று உண்டு. ஆனால், ஆசானை மீறுவது என்பது ஆசானை குறைசொல்லி அல்ல, ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும். `என்னைவிட பெரிய இயக்குநர் ஆக வேண்டும். அப்போதுதான் நான் உனக்கு சரியாக கற்றுக் கொடுத்திருக்கிறேன் என அர்த்தம்' என ராம் சார் என்னிடம் சொல்வார்.
எனவே நான் பெரியாரைவிட மிகசிறந்த சிந்தனையாளன் என என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் பெரியாரை திட்டி நிரூபிக்கக் கூடாது. பெரியாரின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இயங்கச் செய்ய வேண்டியது. எதை மக்களிடம் சேர்க்கிறோம் என்பது மிக முக்கியமானது. வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது. எல்லாவற்றையும் இணைப்பது. அது ஜெயிப்போமா, தோற்போமா என்று தெரியாத யுத்தம். ஆனால் சாகும்வரை அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே இருந்தீர்கள் என்பதே உங்கள் வாழ்வின் உன்னதமான நிலை. அந்த உன்னத நிலைதான் பெரியார் என புரிந்து கொண்டேன் நான்" எனப் பேசினார்.