ரயிலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென பவர் பேங்க் வெடித்து பெட்டிக்குள் புகை பரவினால் பயணிகளின் நிலை என்னவாகும்? ஒடிசாவில் நடந்த ஒரு சம்பவம், ரயில்களின் பாதுகாப்பு விதிகளை மாற்றியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன, ரயில்வே எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம்.
அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை ஒடிசா மாநிலம் பண்டமுண்டா அருகே மும்பையிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற மும்பை–ஹவுரா மெயில் ரயிலில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. ரயிலின் ஏசி பெட்டியில் இரவு நேரத்தில் பவர் பேங்க்கை சார்ஜ் செய்துவிட்டு பயணி ஒருவர் உறங்கியதாகச் சொல்லப்படுகிறது.
சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பயணியின் பவர் பேங்க் திடீரென வெடித்து அந்தப் பகுதியில் தீப்பற்றியது. பெட்டி முழுவதும் புகை பரவத் தொடங்கி, உடனடியாக ரயிலில் இருந்த தீ எச்சரிக்கை அலாரம் அடிக்க தொடங்கியுள்ளது.
அதிகாலை மூன்றரை மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. ரயிலும் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. |
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்களில் இரவு நேர சார்ஜிங் வசதியைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகளை இந்திய ரயில்வே கடுமையாக்கியிருக்கிறது. ரயில்வே வாரியம் அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கும் அனுப்பியுள்ள அறிவிக்கையின்படி, ’இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயணிகள் பெட்டிகளில் இருக்கும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களின் மின்சார விநியோகத்தை நிறுத்த வேண்டும். இந்த உத்தரவை எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்கள் அணைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய ரயில்வே ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதியை அறிவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அது நடைமுறையில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்திருக்கிறது.
பவர் பேங்க் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் சேதமடைந்திருந்தாலோ, உற்பத்திக் குறைபாடு இருந்தாலோ அல்லது அதிக வெப்பமடைந்தாலோ தீப்பற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் சாதனத்தைச் சார்ஜில் போட்டுவிட்டு உறங்கும்போது, அது அதிகமாகச் சூடாகிறதா அல்லது புகை வருகிறதா என்பதைக் கவனிக்க முடியாமல் போகலாம். இனி ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை ரயிலின் சார்ஜிங் பாயிண்டுகளில் சார்ஜ் செய்ய முடியாது என்பதால், இரவு நேரத்தில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களது மொபைல்களை சார்ஜ் செய்துகொள்வது நல்லது. ஒடிசாவில் நடந்த இந்தச் சம்பவம், ரயிலில் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.