டிரெண்டிங்

ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கியதா பாஜக ?

ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கியதா பாஜக ?

webteam

ஜம்மு காஷ்மீர் லடாக்கின் லே பகுதி பத்திரிகையாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் பணம் கொடுக்க முயன்றதாக புகார் அளித்தையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவே மீதமுள்ளதால் அரசியில் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் தேர்தல் தொடர்பான செய்திகளை தங்களுக்கு சாதகமாக எழுத பாஜக பணம் கொடுக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து லே பகுதி பத்திரிகையாளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “ எங்கள் பகுதியில் பாஜக சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரானா மற்றும் விக்ரம் ரந்தாவா ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்க முயற்சி செய்தனர். இவ்வாறு பணம் கொடுத்து தேர்தல் முடிவகளை அவர்களுக்கு சாதகமாக்க முயன்றனர். ஆனால் பத்திரிகையாளர்கள் யாரும் அந்தப் பணத்தை வாங்கவில்லை. இது எங்களை மிகவும் காயப்படுத்தியது. இதனால் பாஜக மாநில தலைவர் மற்றும் விக்ரம் ரந்தாவா ஆகியோர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யவேண்டும்” எனத் தெரிவித்தனர். 

இதுகுறித்து  ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு விக்ரம் ரந்தாவா பேட்டியளித்துள்ளார். அதில், “நாங்கள் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த கவரில் எங்களின் அடுத்த பொதுகூட்டத்திற்கான அழைப்பிதழ் மட்டுமே இருந்தது. இதனை அவர்கள் பார்க்காமல் திருப்பி அளித்துவிட்டனர். எங்கள் மீது அரசியல் காரணங்களுக்காக பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர்” எனக் கூறினார். 

இதனிடையே பத்திரிகையாளர்களின் புகாரை அடுத்து, லே மாவட்ட தேர்தல் அதிகாரி அன்வய் லவாசா இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.