டிரெண்டிங்

தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கிறதா கம்யூனிஸ்ட் கட்சிகள்?

rajakannan

2019 மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக்கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இதனால் தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் சூழலுக்கு இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்த காலம் முன்பு இருந்தது. 2004ஆம் நடந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் வெற்றி பெற்ற 59 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை அலங்கரித்தனர். அந்தக் காலகட்டத்தில் பல முக்கிய விவகாரங்களில் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. 

100 நாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என முக்கிய நலத்திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வர உறுதுணையாக இருந்த இடதுசாரி கட்சிகளின் பலம், தற்போது 5 ஆக சுருங்கிவிட்டது. அதிலும் 4 பேர் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் வெற்றி பெற்றவர்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 

1968ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு சில தகுதிகள் உள்ளன. அதன்படி, ஒரு கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 3 மாநிலங்களில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தமிழகத்தில் 4, கேரளாவில் ஒன்று என மொத்தம் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால், தேசிய கட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும் இக்கட்டான சூழல் இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இடதுசாரி கட்சி சித்தாந்தம் வேரூன்றி இருக்கக்கூடிய மாநிலங்களிலேயே வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. மக்கள் ஆதரவு போராட்டங்களை தீவிரப்படுத்துவது, கட்சி ரீதியில் கட்டமைப்புகளை பலப்படுத்தி தேர்தல் வியூகம் திறம்பட வகுக்க வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.