சென்னையில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும், மீதமுள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகின்ற மே 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் இந்த 21 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகளின் அடிப்படையில் ஆட்சி மாற்றமே நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். அதனால், தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்களை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால்தான், கூட்டணி கட்சிகளை தவிர்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், சென்னையில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முக, அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.
வழக்கமாக ஒரு எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். கடிதம் மூலமாகவோ நேரிலோ 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்படி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எல்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கொறடா ராஜேந்திரன் கடந்த ஆண்டு பரிந்துரை அளித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.