காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவரை சுட முயற்சி நடந்திருக்கலாம் என்றும் அக்கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அகமது பட்டேல் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், அமேதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்த பின் பேசிய போது அவரது தலையில் பச்சை நிற ஒளி அடிக்கடி பட்டதாகவும் இது லேசர் வசதி உள்ள துப்பாக்கியால் குறி வைத்த போது பட்ட ஒளியாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை பார்க்கும்போது ராகுல் காந்தி உயிருக்கு குறி வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் பெரும் குறைபாடு இருப்பது தெரியவருவதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு விசாரிப்பதுடன் ஆபத்து எதுவும் இருந்தால் அதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கடிதத்தோடு ராகுல் பேசும் போது அவர் தலையில் பச்சை நிற ஒளி படுவது போன்ற வீடியோ படத்தையும் அவர்கள் இணைத்துள்ளனர்.
ஆனால் ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரசிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.