தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை; தாமரை இல்லாமல் இலை இல்லை என்று பாஜகவின் மாநிலங்கள் அவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் காளாவாசல் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோடி தலைமையில் நடந்த 4 ஆண்டுகால ஆட்சி பற்றி சமுதாய தலைவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “இந்தியாவிலேயே ஊழலற்ற ஒரே ஆட்சி பா.ஜ.க மோடி தலைமையில் நடைப்பெறும் ஆட்சிதான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் தலை விரித்து ஆடியது. தமிழகத்தில் முத்தலாக் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக நாடாளுமான்ற உறுப்பினர்கள் தடுக்கின்றனர். ஆனால் நீதிமன்றமும் செயல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை. காங்கிரஸுக்குதான் அப்படிப்பட்ட எண்ணங்கள் இருக்கும். தற்போது கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாது. தேர்தல் நேரங்களில் கூட்டணி பற்றி கட்சி கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம். மேலும் கமலை பற்றியோ கமல் கட்சி பற்றியோ நான் பேச விரும்பவில்லை என்று அவர் கூறினார்.