கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாறு காணாத புயல் பாதிப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் கணக்கெடுப்பு பணியை கூட அரசு தொடங்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. பின்பு அது புயலாக மாறியது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. புயலின் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 294 மீனவர்களில் 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.