டிரெண்டிங்

மே 21ல் முதல்வராக பொறுப்பேற்கிறார் குமாரசாமி - பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு

மே 21ல் முதல்வராக பொறுப்பேற்கிறார் குமாரசாமி - பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு

rajakannan

எடியூரப்பா ராஜினாமா செய்துள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பொறுப்பேற்கவுள்ளார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார். மேலும் பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து குமாரசாமி கூறுகையில், “காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். ஆளுநரின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம். அவசரம் ஏதுமில்லை” என்று கூறினார்.

இதனையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜதவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், “மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்ற நடவடிக்கை காரணமாக கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளர். மேலும், மதச்சார்பற்ற அணியும், காங்கிரசும் ஒருங்கிணைந்தது வரவேற்கத்தக்கது என்றார் ஸ்டாலின். கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

ராகுல் காந்தி கூறுகையில், “எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி” என்றார்.