தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றுக்கொண்டார்.
2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி விலகினார். அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் என பலரது பெயர்கள் வெளியானது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் பதவி வகித்த வந்த நிலையில் மீண்டும் தலைவரை மாற்றி காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக ஹெச்.வசந்தகுமார் நியமிக்கப்பட்டார். தமிழ் காங்கிரஸ் செயல்தலைவர்களாக கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பொறுப்பை முறைப்படி கே.எஸ்.அழகிரி பெற்றுக்கொண்டார். தமிழக பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயல் தலைவர்களாக வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
இதில், முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, கருத்து வேறுபாடு இருந்தால் தான் ஜனநாயகம் இருக்கும் என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.