”கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. குறிப்பாக திமுக கூட்டணியில் 27 தொகுதிகளாவது வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பிலிருந்து 21 தொகுதிகள் தரலாம் என பேசிக்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது “நாம் கூட்டணியில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கம் வகித்துள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளோம். அதிக தொகுதி ஒதுக்குவார்கள் என எண்ணினோம். ஆனால் தொகுதி எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்...” என பேச்சை நிறுத்திவிட்டு கண்கலங்கினார்.
தொடர்ந்த கே.எஸ். அழகிரி, “இனிமேல் நான் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டேன். நீங்களே சென்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு சொல்லுங்கள். கையெழுத்திட வருகிறேன்” என்றார்.
இந்நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து கட்சியினருடனான ஆலோசனையின்போது கே.எஸ் அழகிரி கண்ணீர் விட்டதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்” என்று தெரிவித்தார்.