ஜெயலலிதாவின் ஆசியால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் தற்போதுள்ள ஆட்சியை ஆதரிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா வாழ்த்து கூறினார்.
இதுதொடர்பாக சென்னை கீரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் தினகரன். அதேபோல் வெளியேற்றப்பட்டவர் சசிகலா புஷ்பா. எனவே ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட இருவருமே தற்போது ஒன்றாக சேர்ந்துள்ளனர். இதன்மூலம் பார்த்தால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தற்போது அதிமுகவை எதிர்க்கின்றனர். அவர்கள் நிச்சயம் தோற்பார்கள். ஜெயலலிதாவின் ஆசியால் வெற்றி பெற்ற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவளிப்பார்கள்” என்று கூறினார்.