டிரெண்டிங்

அதிமுக Vs அமமுக: கவனம் பெறும் சட்டப்பேரவைத் தொகுதிகள்!

அதிமுக Vs அமமுக: கவனம் பெறும் சட்டப்பேரவைத் தொகுதிகள்!

jagadeesh

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்தத்தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து களம் காண்கிறார்.

50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக நேற்று வெளியிட்டது. அதில், கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து, அமமுகவின் பூக்கடை என்.சேகரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போடி தொகுதியில், அமமுகவின் எம்.முத்துசாமியும் போட்டியிடுகின்றனர். அதிமுகவில் சீட் கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி, அமமுகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் அமமுகவில் சேர்ந்த ராஜவர்மன், மாலையில் அக்கட்சியின் வேட்பாளர் ஆனார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக அமமுக சார்பில் ராமுத்தேவர், திண்டுக்கல் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எதிராக அமமுகவின் ஆர்.பாலசுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து ஒரத்தநாடு தொகுதியில் அமமுகவின் சேகர் போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை தேர்தலை சந்திக்கிறார். கன்னியாகுமரியில் அதிமுகவின் தளவாய்சுந்தரத்தை எதிர்த்து அமமுக சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுகிறார். இதுவரை வெளியான 65 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் , 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு முன்னாள் எம்.பி. மற்றும் ஒரு முன்னாள் மேயர் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய முகங்கள் 40 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட அமமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.