டிரெண்டிங்

ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான போட்டி- டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா

ஐபிஎல்: பஞ்சாப்புக்கு எதிரான போட்டி- டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா

webteam

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார் கொல்கத்தா நைட் ரைடரஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியே இரு அணிகளுக்கும் வெற்றிகரமான துவக்கமாக அமைந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி தனது துவக்க ஆட்டத்தில் வலுவான சென்னை அணியை எளிதாக வீழ்த்தியிருந்தது. மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வியக்க வைத்தது. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை துரத்தி, இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், ஒடின் ஸ்மித் ஆகியோரது அதிரடியால் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. பானுகா ராஜபக்சே, தவான், ஷாருக்கான், ஒடியன் சுமித் பேட்டிங்கில் மிரட்டினர். இப்போட்டி மூலம் தாங்கள் அபாயகரமான அணி என்பதை நிரூபித்துள்ளது பஞ்சாப். இன்றைய ஆட்டத்திலும் அதே போல் அதிரடி காட்டும் உத்வேகத்துடன் அந்த அணி களமிறங்க உள்ளது. 3 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்து பயிற்சியை தொடங்கியுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இன்றைய ஆட்டத்தில் களம் இறங்க உள்ளார். அவரது வருகை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 128 ரன்னில் சுருண்டு பேட்டிங்கில் சொதப்பியது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங் படை எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி, சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி கலக்குகிறார்கள். பேட்டிங்கிலும் ஒருங்கிணைந்து ‘க்ளிக்’ ஆகும் பட்சத்தில் கொல்கத்தா அசுரபலம் வாய்ந்த அணியாக உருவெடுக்கும்.

பனியின் தாக்கம் காரணமாக டாஸ் வெல்லும் அணிகள் பவுலிங்கை தேர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளன. அதேபோல இன்றும் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கையே தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 2 வது வெற்றி யாருக்கு? இன்னும் சிறிது நேரத்தில் துவங்கும் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.