Kolkata Ship House
Kolkata Ship House Twitter
டிரெண்டிங்

“கப்பல் மாதிரி வீடா? வீடே கப்பல்தான்” - 'ஹே எப்புட்றா' என மிரளச் செய்யும் கொல்கத்தா விவசாயி..!

Janani Govindhan

வீடு பார்ப்பதற்கு கப்பல் மாதிரி இருக்கு என பலர் சொகுசு பங்களாக்களை சொல்வது வழக்கம். ஆனால் விவசாயி ஒருவர் அந்த வழக்கத்திற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று கப்பல் வடிவிலான வீட்டையே கட்டிக் கொண்டிருக்கிறார்.

யார் அந்த விவசாயி? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் காணலாம்:

கப்பல் மாதிரி வீடு கட்ட வேண்டுமென கடந்த 2010ம் ஆண்டு முதல் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த மின்ட்டு ராய் என்ற விவசாயி. கப்பல் வடிவிலான வீட்டை கட்டுவதே தன்னுடைய லட்சியம், கனவு என்று மின்ட்டு கூறியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தின் ஹெலெஞ்சா மாவட்டத்தில் உள்ள வடக்கு 24 பார்கனாஸ் பகுதியைச் சேர்ந்த இந்த விவசாயி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக தனது கனவு இல்லத்தை கட்டி வருகிறார். 2024ம் ஆண்டுக்குள் கப்பல் வீட்டை கட்டிவிடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

சிலிகுரியில் உள்ள ஃபசிடாவா பகுதியில் கடந்த 20-25 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிய மின்ட்டுவின் குடும்பத்தினர், தங்கள் வாழ்நாளை விவசாயத்திலேயே கழித்திருக்கிறார்கள். அதன் பிறகு தந்தையுடன் கொல்கத்தாவுக்கு வந்தவர் அங்கேயே தங்கியிருக்கிறார்.

Kolkata Farmer Mintu Roy

இப்படியான நிலையில் 2010-ல் கப்பல் வடிவிலான வீட்டை கட்ட வேண்டும் என்பதற்காக ஏராளமான இன்ஜினியர்களை மின்ட்டு அணுகிய போது அனைவருமே அது எந்த அளவுக்கு சாத்தியப்படும் எனக் கூறி தயங்கினார்களாம். பின் ஒருவழியாக தனது கனவு வீட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார் மின்ட்டு.

சரியாக 2010ம் ஆண்டு தொடங்கியிருக்கிறது அவரது கப்பல் வீட்டின் கட்டட பணிகள். அவ்வப்போது பொருளாதார சிக்கல் காரணமாகவும் மின்ட்டுவின் வீடு கட்டும் பணி தடைபட்டும் போயிருக்கிறது. இருப்பினும் மனம் தளராமல் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்து தனக்கு பிடித்தமான கப்பல் வடிவ வீட்டை இப்போதுவரை கட்டிக் கொண்டிருக்கிறார் மின்ட்டு.

ஒருகட்டத்தில் கட்டட பணியாளர்களுக்கு கூலி கொடுக்கவே காசு இல்லாமல் போனதால் நேபாளத்திற்கு சென்று மூன்று ஆண்டுகள் தங்கி தானே கட்டட வேலையை கற்று தேர்ந்திருக்கிறார். 39 அடி நீளமும், 13 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்ட இந்த வீட்டை கட்டுவதற்காக இதுகாறும் மின்ட்டு 15 லட்சம் ரூபாய் வரை செலவிட்டிருக்கிறாராம்.

தற்போது மின்ட்டுவின் கப்பல் வீடுதான் அந்த பகுதியிலேயே அனைவராலும் ஈர்க்கப்படும் இடமாக இருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் மின்ட்டு ராய், “கட்டட பணியை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். வீட்டின் மேல், ரெஸ்டாரன்ட் கட்டவும் எண்ணுகிறேன். அப்போதுதான் அதை வைத்து வருமானம் ஈட்ட முடியும். இந்த வீட்டுக்கு என் தாயின் பெயரை வைக்கப் போகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.