கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் எழுபள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் உள்ள எழுபள்ளம் ஏரியை குடிமராமத்து செய்ய வேண்டுமென்று கிராம ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து குடிமராமத்து பணிகளுக்காக 90 லட்சம் நிதியை ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏரியின் பாசன பயனாளிகள் கொண்ட விவசாயக்குழு சங்கத்தின் தலைமையில் பணிகள் துவக்கப்பட்டன.
துவக்கிய பணிகளை நடைபெற விடாமல் அக்கிராமத்தில் உள்ள ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலர் தலையிட்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமையில்தான் குடிமராமத்து பணிகளை செய்ய வேண்டும் என்று, பணிகளுக்கு தடையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கிராம விவசாய குழுவினர் இணைந்து, குடிமராமத்து பணிகள் ஆயக்கட்டு விவசாயிகள் தலைமையில் நடைபெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுச் செய்தனர். இந்த மனுவை விசாரணைசெய்த நீதியரசர்கள், குளத்தை தூர்வார இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.